தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 37 அதிமுக எம்பிகளில் மிகவும் குறைந்த வயது வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன். தென் சென்னை தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு வயது 26 தான் ஆகிறது. இவர் முன்னாள் சபாநாயகர் டி.ஜெயக்குமாரின் மகன். சுமார் ஒரு ஒரு லட்சத்து முப்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத் தில் திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவனைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
சென்ற ஆண்டுதான் இவரது திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் ஸ்வர்ணலதா. அவரும் ஒரு மருத்துவர்தான். திருமண வரவேற்புக்கு முதல்வர் ஜெயலலிதா வந்திருந்தார். தென்சென்னைக்கு யார் யார் பெயரோ அடிபட்ட நிலையில் எந்த அனுபவமும் இல்லாத இளைஞரான ஜெயவர்த்தன் பெயரை அறிவித்து ஆச்சரியம் அளித்தார் ஜெ. ஜெயவர்த்தன் ராமசந்திரா மருத்துவக்கல்லூரியில் டாக்டர் பட்ட மேற்படிப்பு மாணவர். தேர்வுகூட எழுதாமல் தன் முதல் தேர்தலில் குதித்துவிட்டார். இதுதான் இவருக்கு முதல் தேர்தல். மாணவர் சங்கத் தேர்தல்களில் கூட போட்டியிட்ட அனுபவம் இல்லை.
காஞ்சிபுரம் எம்பியாகத் தேர்வாகியிருக்கும் மரகதம் குமாரவேலுக்கு வயது 31. இவருக்கு தேர்தல் புதிதல்ல. ஏற்கெனவே திருப்போரூர் பஞ்சாயத்து யூனியன் சேர்மனாக இருந்தவர்.
இந்த தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் செல்வத்தை 1.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத் தில் ஜெயித்தார். இவரது கணவர் குமாரவேல் தையூர் கிராம பஞ்சாயத்து தலைவர். கணவன் மனைவி இருவருமே எம்.பியாக விரும்பியதில் முதல்வர் மனைவிக்கே வாய்ப்பளித்தார். ஒன்பது வயதில் இவருக்கு மகளும் உண்டு.
கேஆர்பி பிரபாகரன் திருநெல்வேலியில் இருந்து திமுகவின் தேவதாச சுந்தரத்தை 1.26 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றவர். 35 வயதாகும் பிரபாகரன் சேலம்
சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி படித்தவர். மனைவி சுகணா தமிழ்ப் பேராசிரியர். பாரம்பரியமான அதிமுக குடும்பத்தில் இருந்துவந்தவருக்கு இதுவே முதல் தேர்தல். இந்த மூன்று இளம் எம்பிகளுக்கும் உ ள்ள ஒரே ஒற்றுமை இந்தி தெரியாது என்பதே. இனிமேல்தான் கற்றுக்கொள்ள வேண்டும். அதிமுகவின் 37 எம்பிகளில் 34 பேர் முதல் முறையாக எம்பி ஆகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
ஜூன், 2014.